கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஓராண்டாக குறைந்திருந்த நிலையில், தற்போது சீனாவில் பிஎஃப் 7 (Omicron BF.7) வகை பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவிலும் பிஎஃப் 7 (Omicron BF.7) புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால், மீண்டும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முழு வீச்சில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், மக்களுக்கு நிம்மதியளிக்கும் செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். பெங்களூருவைச் சேர்ந்த டாடா மருத்துவம் மற்றும் நோயறிதல் துறையின் மூத்த ஆராய்ச்சியாளர் ரவி, “இந்தியாவை பொறுத்தவரை பிஎஃப்.7 வைரஸால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே அறிகுறிகள் தென்படும்” என்று தெரிவித்தார்.
![இந்தியாவில் மீண்டும் கொரோனா அலையா..? பாதிப்புகள் எப்படி இருக்கும்..? ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவல்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2021/05/Debraj_Ray_Lockdown_The_HIndu-1586571317.jpeg)
இந்த புதிய வைரஸானது லேசான வடிவத்தில் மாறியுள்ளதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், “இந்தியர்கள் பெரும்பாலானோருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்” என்று குறிப்பிடுகிறார்கள். மேலும், பிஎஃப் 7 வைரஸ் அதிகரித்தால் அதனை கொரோனா பெருந்தொற்றும் அலை என்ற சொல்லால் வரையறுக்க முடியாது. ஒரு அலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து உச்சத்தை தொட்டு மீண்டும் குறைந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.