திமுகவில் 16 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. பல அமைச்சர்கள் சிறைக்குச் செல்ல நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசியல் நேர்மையாக இருந்த காலத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்த, அரசியல் அனுபவம் வாய்ந்த, தலைவர்கள் அனைவரும் இன்று பாஜகவில் இருக்கிறார்கள். ஊழலற்ற ஆட்சி பாஜகவால் மட்டும்தான் தர முடியும் என்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள்.
அடுத்த பத்து ஆண்டுகளில், நமது நாடு எப்படி இருக்க வேண்டும், அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்ற தொலை நோக்குச் சிந்தனையோடு செயல்பட்டு வருவதால், கடந்த 1984 ஆம் ஆண்டு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த பாஜக, இன்று 303 பாராளுமன்ற உறுப்பினர்களோடு, தனிப் பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது.
அரவக்குறிச்சி இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பு இல்லை. வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மூன்று நதிகள் அருகில் ஓடியும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. இவை அனைத்தும் மாற வேண்டும். கரூரில், விவசாயம், நீர் மேலாண்மை, தொலை நோக்குப் பார்வையோடு திட்டங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் வர வேண்டும்.
இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள், தொகுதியை முன்னேற்றுவதை விட, தங்களை முன்னேற்றிக் கொண்டார்கள். தொகுதி அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது பண மோசடி வழக்கில் 280 நாட்களாக சிறையில் இருக்கிறார். இத்தனை நாட்களாக, துறை இல்லாத அமைச்சராக மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்ற அவர், இப்போதுதான் ஜாமீன் கிடைப்பதற்காக பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது தம்பி 280 நாட்களாகத் தலைமறைவாக இருக்கிறார். திமுகவில் 16 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. மேலும் பல அமைச்சர்கள் சிறைக்குச் செல்ல நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தை திமுக கடன்கார மாநிலமாக மாற்றியிருக்கிறது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், ரூ.5 லட்சம் கோடி கடனில் இருந்து ரூ.8 லட்சம் கோடி கடனாக மாற்றி வைத்திருக்கிறார்கள். மொத்தம் ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் கோடி கடன் தமிழகத்துக்கு இருக்கிறது. இந்தக் கடனை அடைக்கவே இன்னும் 86 ஆண்டுகள் ஆகும். கமிஷன் அடிப்பதற்காகவே பட்ஜெட் போடுகிறது திமுக. திமுக பட்ஜெட்டில் ரூ.1,500 கோடி அடையாறு நதியை சுத்தம் செய்ய ஒதுக்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டும் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்தார்கள். இரண்டு ஆண்டுகளில் ரூ.3,000 கோடிக்கு செலவு செய்ய அடையாற்றில் என்ன இருக்கிறது என்றார்.