கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 66 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாடு, புதுச்சேரி ஜிப்மரில் இதுவரை 66 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 55 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உரிய முறையில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய சிறப்பு அலுவலர் நியமிக்கப்படுவார்.
சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மெத்தனால் பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்துவது சிரமமான விஷயம். மெத்தனால் வேதிப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய நேரில் செல்கிறோம்” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.