நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை விரிவான விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து 3 கோடியே 99 லட்சம் ரூபாயும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரின் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருதமுடியாது எனவும், இருப்பினும், இது சம்பந்தமாக அமலாக்கத் துறையின் விளக்கத்தை பெற்று தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு வரும் ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விரிவான பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.