மயிலாடுதுறை மாவட்டம், சித்தன்காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான கல்யாணசுந்தரம் என்கிற வைரவேல். 10-ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவி ஒருவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் தன்னை மாணவி காட்டிக்கொடுத்து விடுவார் என்ற அச்சத்தில், அவர் மாணவியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி அவர் மாணவியை காலால் கழுத்தில் மிதித்துத்துள்ளார். இதில் மாணவி பலத்த படுகாயம் அடைந்துள்ளார்.
இதையடுத்து, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கதறி துடித்த மாணவியின் பெற்றோர், சம்பவம் குறித்து திருவெண்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்த திருவெண்காடு போலீசார், கல்யாணசுந்தரத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று மாலை மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி தலைமையில் நடைபெற்றது. அப்போது கல்யாணசுந்தரம் மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து, அவருக்கு பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், கொலை குற்றத்துக்காக ஒரு ஆயுள் தண்டனையும் என இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மேலும், 4,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.