லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முயற்சியில் ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 2028ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் புதிதாக சேர்க்க உள்ள 8 விளையாட்டுகளின் உத்தேச பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கிரிக்கெட், கராத்தே, கிக் பாக்சிங் உள்ளிட்ட விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டி இணைந்து இந்த பட்டியலில் உள்ள விளையாட்டுகளை இறுதி செய்யும். இதற்காக ஐசிசியை சர்வதேச மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டி அழைத்து பேசவுள்ளது.
ஒலிம்பிக்கில் ஒரு விளையாட்டு சேர்க்கப்படுவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. வீரர்களில் உடல் நலம், உலக அளவில் விளையாட்டின் தாக்கம், பாலின சமத்துவம் குறிப்பாக போட்டி நடத்தும் நாட்டின் விருப்பம் உள்ளிட்டவற்றை பொறுத்தே முடிவு செய்யப்படும். ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டும் கிரிக்கெட் நடத்தப்பட்டுள்ளது. 1900ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு அணிகள் மட்டுமே பங்கேற்றன. அதுவே, இறுதிப் போட்டியாகவும் அமைந்தது. தொடக்க காலங்களில் கிரிக்கெட் என்பது 5 நாட்கள் நடைபெறும் போட்டி என்பதால் அதை நடத்துவது கடினமாக இருந்தது என்றும் அதனால்தான் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை என்றும் வல்லுனர்களின் தெரிவிக்கின்றன.
தற்போது ஒருநாள், இருபது ஓவர் என கிரிக்கெட்டின் வடிவங்கள் மாறியிருப்பதாலும், கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் அதிகரித்திருப்பதாலும் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்ற குரல் அதிகரித்துள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டும் ஐசிசி இதற்கென தனிக் குழுவை அமைத்துள்ளது. இந்திய அணி கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்படுவதால் இதன்முலம் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கிடைக்கும் என்ற வாதங்கள் வைக்கப்பட்டாலும், இந்த இணைப்பு இந்தியாவில் மற்ற விளையாட்டுகள் மீது கிரிக்கெட் செய்யும் ஆதிக்கத்தை மேலும் அதிகப்படுத்தும் என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது.