பஞ்சாப்பைச் சேர்ந்த முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான அருண் ஷர்மா நேற்றைய தினம் காலமானார். அவருக்கு வயது 65. விக்கெட் கீப்பரான அருண் ஷர்மா 1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 22 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக தனது 20 வயதில் தனது முதல் தர அறிமுகத்தை தொடங்கினார். ரஞ்சி கோப்பையில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அருண், 1992-93ல் கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்தார். அவர் மொத்தம் 73 முதல்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அருண் ஷர்மா தனது விளையாட்டு வாழ்க்கைக்குப் பிறகு விளையாட்டில் தொடர்ந்து இணைந்திருந்தார். அவர் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு தேர்வாளராக பணியாற்றினார். 2017 இல் அஜய் ராத்ரா அந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் வரை அவர் பஞ்சாப் மூத்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 2017 இல், பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் அதன் இணைச் செயலாளராக ஷர்மாவைத் தேர்ந்தெடுத்தது.
இந்நிலையில் மறைந்த அருண் ஷர்மாவிற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளனர். யுவராஜ் சிங்கின் பதிவில் “கிரிக்கெட்டில் மூத்தவரான அருண் ஷர்மா பாஜி காலமானார் என்ற வருத்தமான செய்தி. விளையாட்டின் ஆழமான அறிவிற்காக அவர் நினைவுகூரப்படுவார். இந்த இக்கட்டான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடன் உள்ளன” என்று பதிவிட்டிருந்தார்.
ஹர்பஜன் சிங் அவர்களின் பதிவில், “இன்று நமது மூத்த கிரிக்கெட் வீரர் அருண் ஷர்மாவின் மறைவைக் கேட்டு மிகவும் வருத்தமாக உள்ளது.. குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல்.. RIP அருண் பாஜி” என்று பதிவிட்டிருந்தார்.