சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சிஎஸ்கே அணியின் பயிற்சி ஆட்டத்தின்போது, தல தோனி களமிறங்கியபோது, அரங்கம் அதிர ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தங்களது அணியில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி உட்பட சென்னை அணி வீரர்கள், சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அணி வீரர்களுக்கிடையில் நடந்த பயிற்சி ஆட்டத்தில், கேப்டன் தோனி மைதானத்திற்கு உள்ளே வரும் வீடீயோவை அணி நிர்வாகம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
அப்போது அரங்கமே அதிரும் வகையில், ”தோனி தோனி” என அவரது பெயரை ரசிகர்கள் முழக்கமிட்டு, ஆரவார வரவேற்பை வழங்கினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீசனின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.