16வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. நாளையுடன் லீக் போட்டிகள் நிறைவடைந்து, ப்ளே ஆஃப் சுற்றுகள் தொடங்க உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறி விட்டன.
வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியும் புல்லிபட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட்டும் மற்றும் டெவோன் கான்வேவும் டெல்லி அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 50 பந்துகளில் 79 ரன்கள் எடுத்த கெய்க்வாட் 15வது ஓவரில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து வந்த துபே சிக்சர் மழை பொழிந்தார். 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் துபே அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவோன் கான்வே 52 பந்துகளில் 87 ரன்களை குவித்து வெளியேறினார். இந்த ஆட்டத்த்திலும் டோனி சிக்ஸர் அடிப்பார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு கனவாகவே இருந்தது.
இறுதியில் சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் ஆடிய பிரித்வி ஷா 5 ரன், பிலிப் சால்ட் 3 ரன், ரீலி ரோசவ் 0 ரன், யஷ் துல் 13 ரன், அக்சர் படேல் 15 ரன் எடுத்து அவுட் ஆகினர். அரைசதம் அடித்த வார்னர் 86 ரன்னில் அவுட் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கல் மட்டுமே டெல்லி அணியால் எடுக்க முடிந்தது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இந்த போட்டியில் சுவாரசியமான நிகழ்வு ஒன்று நடந்தது. அது என்னவென்றால், டெல்லி அணி பேட்டிங் செய்தபோது 5வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் 2 பந்துகளை சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசிய வார்னர் 3வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். அப்போது 2ஆவது ரன்னுக்கு ஓடும் முயற்சியில் வார்னர் ஈடுபட்டார். அப்போது ரஹானே ஸ்டெம்பை அடித்தார். அது ஸ்டெம்பை அடிக்காமல் ஜடேஜாவிடம் சென்றது, மீண்டும் ரன் எடுக்கும் முயற்சியில் வார்னர் ஓட முயன்று ஆட்டம் காட்டினார். பதிலுக்கு ஜடேஜாவும் ஸ்டெம்பை அடிப்பது போல ஆட்டம் காட்டினார். இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத நிலையில் வார்னர் கத்தி சுற்றுவதை போல் பேட்டை சுழற்றினார். இதை பார்த்த ஜடேஜா சிரித்தப்படி விலகி சென்றார். எதிர் திசையில் இருந்த மற்றொரு பேட்ஸ்மேன் ஆன சால்ட் என்ன நடக்கிறது என்று தெரியால் முழித்தார். வார்னரின்இந்த செயலால் அரங்கமே சிரிப்பலையில் மூழ்கின.