அடிக்கடி சிடி ஸ்கேன் எடுப்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சிடி ஸ்கேனின் அதீத கதிர்வீச்சு காரணமாக, உடல் உறுப்புகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது. குறிப்பாக, குழந்தைகளை சிடி ஸ்கேன் அதிகம் பாதிப்பதாகவும், புதிதாக உருவாகும் புற்றுநோய்களில் சிடி ஸ்கேன்களின் பங்கு 5% வரை இருக்கக் கூடும் என அமெரிக்க மருத்துவ ஆய்விதழ் JAMA Internal Medicine-ல் வெளிவந்துள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முடிந்த அளவில் சிடி ஸ்கேன் எடுப்பதை தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த 2007ஆம் ஆண்டு முதல், சிடி ஸ்கேனின் பயன்பாடு 30% அதிகரித்துள்ள நிலையில், 2023 சிடி ஸ்கேன்களுடன் 1,03,000 புற்றுநோய் பாதிப்புகள் எதிர்காலத்தில் இணைக்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இத்தகைய சிடி ஸ்கேன்களை மீண்டும் மீண்டும் எடுக்கும் போது அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் வெளிப்பாடு பல்லாயிரக்கணக்கான புதிய புற்றுநோய்களுக்கு காரணமாக அமையலாம்.
கட்டிகள், தசைகள் மற்றும் எலும்பு நிலைகளைக் கண்டறிய சிடி ஸ்கேன் பெரிதும் உதவுகிறது. மேலும் இது நோய்கள், காயங்கள் மற்றும் உடலின் மற்ற உள் நிலைமைகளை அதிக துல்லியத்துடன் கண்டறிய மருத்துவர்களுக்கு உதவுகிறது. ஆனால், இதன் குறைந்த அளவிலான அயனியாக்கும் கதிர்வீச்சு, புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிடி ஸ்கேன் பெரும்பாலும் உயிர்காப்பவையாகும். ஆனால், அதன் தீங்குகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. அதிக அளவு கதிர்வீச்சால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறித்து அறியப்பட்டாலும், குறைந்த அளவிலான கதிர்வீச்சுக்கும், புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாகக் கூற போதுமான ஆதாரங்கள் இல்லை.