மாணவர்களுக்கான CUET தேர்வு, வரும் 30-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில், இளங்கலை படிப்புகளில் சேர நடத்தப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் (CUET)தேர்வுக்கு, தேர்வர்கள் cuet.samarth.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்தும் வந்தனர். CUET தேர்வுக்கு இதுவரை 11,51,319 பேர் விண்ணப்பம் 9,13,540 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். தேர்வுக்கு கடந்த 22-ம் தேதி வரை விண்ணப்பித்து வந்தனர். இந்த தேர்வுகளை, வரும் 20-ம் தேதிக்குள் முடிக்க, தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை திட்டமிட்டிருந்தது.
தொழில்நுட்பக் காரணங்களால் இரண்டு மற்றும் 3-ம் கட்டத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், 4-ம் கட்டத் தேர்வு, வரும் 17 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 3.72 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். கடந்த இரண்டு மற்றும் மூன்றாம் கட்டத் தேர்வின்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 4-ம் கட்டத் தேர்வு எழுதும் மாணவர்கள், வேறு இடங்களை தேர்வு செய்வதற்கு அனுமதி கோரி இருந்தனர். வேறு தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்க வசதியாக, அவர்களுக்கான தேர்வு மட்டும், வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், குஜராத்தி, ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி, ஆங்கிலம், இந்தி, உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. வெளிநாட்டு மாணவர்களுக்காக 19 மொழிகளிலும் மொழித்திறன் தேர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.