கொரோனா காரணமாக லாக்டவுன் விதிக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளில் உண்மை இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்..
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது…
இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இன்று முதல் அரசு மருத்துவமனைக்கு வருவோர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இதை தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்கள் தகவல்கள் பரவி வருகிறது..
இந்நிலையில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று வாட்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், பொதுமக்கள் யாரும் அதனை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்..