மத்தியப்பிரதேசத்தில் ஒருவருக்கு 3,419 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ரசீது அனுப்பப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நபர் மயங்கி விழுந்தார்.
மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியரின் ஷிவ் விகார் காலனியில் வசித்துவருபவர் பிரியங்கா குப்தா. இவருக்கு மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ரசீது ஒன்று வந்துள்ளது. அதில், 3 ஆயிரத்து 419 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தார். மின் கட்டண தொகையை கேட்ட பிரியங்கா குப்தா-வின் மாமனாருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக மின்சாரத் துறை அலுவலகத்தை தொடர்புகொண்டபோது, மனித தவறு காரணமாகவே தவறாக ரசீது அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுகரப்படும் மின்சாரத்தின் அளவை செலுத்த வேண்டிய இடத்தில் மின் இணைப்பு எண்ணை ஊழியர் தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும் அதனால் இந்த கட்டணம் வந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் 1,300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி ரசீதை மாற்றித் தந்தனர். இதனால், அவரது குடும்பத்தினர் நிம்மதியடைந்தனர். இதுதொடர்பாக ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாநில மின்சாரத் துறை அமைச்சர் பிரத்யுமன் சிங் தோமர் தெரிவித்தார்.