தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடி ரயில்நிலையத்தில் ரயில் எஞ்சின் மீது ஏறி கொடியசைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த தியாக இமானுவேல்சேகரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 65வது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவு இடத்தில் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது சில இளைஞர்கள் பரமக்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எஞ்சின் மீது ஏறினர் . அந்த இளைஞர் தான் கொண்டு வந்த கொடியை அசைத்தார். அப்போது மேலே சென்ற மின்சார வயர் மீது கொடிபட்டது. இதையடுத்து மின்சாரம் தாக்கியதில் அந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார்.
அதிர்ச்சிகரமான இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இளைஞர் தேவக்கோட்டையைச் சேர்ந்த முகேஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது. அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றார். மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சுமார் 2 – 3 மணிநேர பயணத்திற்கு பின்னர் மதுரை மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.