வங்கக்கடலில் கடந்த 14ஆம் தேதி உருவான காற்றழுத்த மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு மாலத்தீவுகளின் பரிந்துரைப்படி “மிதிலி” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் வங்கதேசம் அருகே நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது, 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறைக்காட்டு வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.