நாடு முழுவதும் சிலிண்டர் விலை உயர்வு, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்ந்துள்ளது. அதே போல ஃபாஸ்டேக் விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.7.50 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை இன்றைக்கே அமலுக்கு வந்தது. விலை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று முதல் ரூ.1,817க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்படும்.
தொடர்ந்து நான்கு மாதமாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
ஃபாஸ்டேக் விதிமுறை…
வாகனங்களிடம் டோல் கட்டணம் வசூலிப்பதற்கு ஃபாஸ்டேக் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், இன்று முதல் ஃபாஸ்டேக்குக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன. புதிய வாகனங்கள் வாங்கி 90 நாட்களுக்குள் ஃபாஸ்டேக் அப்டேட் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், வாகனங்களின் பதிவு எண், சேஸி எண் ஆகியவை கட்டாயமாக ஃபாஸ்டேக் உடன் இணைக்கப்பட வேண்டும். மேலும், மொபைல் எண்ணுடன் ஃபாஸ்டேக் இணைக்கப்பட வேண்டும். ஃபாஸ்டேக் இல்லையென்றால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.