நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரலாம் என கூறப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஜூன் 3ஆம் தேதி 234 தொகுதிகளை சேர்ந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளதும், அதன் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் நடிகர், நடிகைகள் பல கட்சிகளில் செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விஜயகாந்த் தேமுதிகவையும், சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியையும், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியையும் தொடங்கி செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் தான் நடிகர் ரஜினிக்கு பிறகு நடிகர் விஜய் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என தொடர்ந்து பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மேலும், அவரது சமீபத்திய நடவடிக்கைகளும் அரசியலை நோக்கியே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்றது, விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை அரசியலுக்கான முயற்சிக்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதுதவிர தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த 5 தேர்தல்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்கள், அவர்கள் சார்ந்த கட்சிகள், அவர்கள் பெற்ற வாக்குகள் ஆகியவற்றை விஜய் மக்கள் இயக்கத்தினர் சேகரித்து வருவது விஜயின் அரசியல் அச்சாரமாக பார்க்கப்படுகிறது. இதன் அடுத்தக்கட்டமாக தான் நடிகர் விஜய் 234 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களை சந்திக்க திட்டடமிட்டுள்ளார். நடந்து முடிந்து பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் வெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை விஜய் சந்திக்கிறார். ஒரு தொகுதிக்கு 6 பேர் என மொத்தம் 234 தொகுதிகளை சேர்ந்த 1,444 மாணவர்களை நடிகர் விஜய் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்ட உள்ளார். மேலும் அவர்களுக்கு நிதியுதவிகள் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் மாணவ-மாணவிகளை சந்திக்க நடிகர் விஜய் தேதி குறித்துள்ள விவரம் வெளியாகி உள்ளது. அதாவது ஜூன் 3ஆம் தேதி சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த சந்திப்பின்போது மாணவ-மாணவிகள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோரும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.