தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
திராவிட கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர் நடிகர் சத்யராஜ். இவர், மேடைகள் தோறும் பெரியார் கருத்துகளை முழங்கி வருகிறார். பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கடந்த 2007ஆம் ஆண்டு ‛பெரியார்’ என்ற திரைப்படம் வெளியான நிலையில், அதில் சத்யராஜ் தான் பெரியாராக நடித்தார். சத்யராஜின் மனைவி மகேஸ்வரி. மகள் திவ்யா. மகன் சிபிராஜ்.
திமுக சத்யராஜ் மகள்
இதில் சிபிராஜ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். மகள் திவ்யா சினிமாவில் இருந்து சற்று விலகியே இருந்தார். இந்நிலையில் தான் திவ்யா சத்யராஜ் திடீரென திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
தவெகவில் சத்யராஜ் மகன்
இந்நிலையில் தான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து பல நடிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தற்போது சிபிராஜும் தன்னுடைய ஆதரவை விஜய்க்கு கொடுத்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கட்சி துண்டுடன் விஜய் இருக்கும் படத்தை பதிவிட்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.
திமுகவை விளாசிய விஜய்
நேற்று பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக போராடி வரும் கிராம மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து தனது ஆதரவை கொடுத்தார். அப்போது பேசிய அவர் ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். எதிர்கட்சியாக இருந்த போது 8 வழிச்சாலையை எதிர்த்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவது ஏன்..? உங்களின் லாபத்திற்காக விவசாயிகளை பலிகாடாக்காதீங்க.. உங்களின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என அனல் பறக்க பேசியிருந்தார்.