நெல்லை மாவட்டம் வடுகன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமிக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ராமசாமியின் தாய் சீதா ராமலட்சுமிக்கும், மகாலட்சுமிக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், ஆத்திரத்தில் இருந்த மகாலட்சுமி, அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாமியார் சீதா ராமலட்சுமியை ஆண் வேடம் அணிந்து சென்று சரமாரியாக தாக்கிவிட்டு, அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் சீதா ராமலட்சுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டது மருமகள் மகாலட்சுமி என்பதை கண்டுபிடித்தனர். இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீதா ராமலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், மகாலட்சுமியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.