இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் டேவிட் வார்னர் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களில் டேவிட் வார்னருக்கு இந்தியாவில் ரசிகர்கள் இடையே எப்போதும் தனி இடம் உண்டு. இன்ஸ்டாகிராமில் டேவிட் வார்னரை லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெடில் ஐதராபாத், டெல்லி அணிகளுக்காக விளையாடி டேவிட் வார்னர் இந்திய ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளார். மேலும் இந்திய சினிமா பாடல்களுக்கு குடும்பத்துடன் நடனமாடும் வீடியோவை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
அவரது மனைவி மற்றும் மகள்களுடன் நடனம் ஆடியபடி அவர் வெளியிடும் வீடியோ இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இணையத்தில் பலமுறை வைரலாகி இருக்கிறது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வார்னர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், எனது நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் மகிழ்வுற்று இருக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இது இந்திய ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை உருவாக்கி உள்ளது.
இந்தப் பதிவில் அவர் பின்னணியில் உள்ள விநாயகர் சிலையை இரு கைகளையும் கூப்பி வணங்கும் விதமாக உள்ளது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் ஜெர்சியை அணிந்துள்ளார். இந்தப் பதிவை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.