வெற்றி துரைசாமி மறைவுக்கு, அவரது தந்தையான சைதை துரைசாமியை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் இமாச்சல பிரதேசத்திற்கு சென்றார். அப்போது, கடந்த 4ஆம் தேதி மலைப்பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த காரானது 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, சட்லஜ் நதியில் விழுந்தது.
இந்த விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். காணாமல் போன வெற்றி துரைசாமியை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே, கடந்த 9 நாட்களுக்கு பின்னர் வெற்றி துரைசாமியின் உடல் விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டது.
இதனையடுத்து, வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் நேற்று (பிப்ரவரி 13) மாலை சென்னை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சைதை துரைசாமி குடும்பத்தை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.