கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 156 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா மற்றும் தமிழக எல்லைகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. வயநாடு மேப்பாடி பகுதியில் உள்ள சூரல் மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேப்பாடு முண்டக்கை மற்றும் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட இதுவரையில் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஆயிரற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, இதுவரை 156 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணியானது நடைபெற்று வருகிறது. தற்போது தேசிய பாதுகாப்பு மீட்புப் படை (NDRF) வீரர்கள், மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, கோவை மாவட்டம் சூலூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளுக்காகச் சென்றுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ராணுவத்தினர் வயநாடு பகுதிக்கு விரைந்துள்ளனர்.
காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை கண்டறிய வயநாடு மாவட்ட அதிகாரிகள் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். ரேஷன் கார்டு விவரங்கள் மற்றும் பிற அரசு ஆவணங்களை மதிப்பாய்வு செய்வதன் மூலம் காணாமல் போனவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இரண்டு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், மீட்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக வயநாட்டில் நிறுத்தப்பட்டுள்ள மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மீட்புப் பணிகளுக்காக மொத்தம் 225 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவத்தின் பல நிறுவனங்கள் திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரில் இருந்து கோழிக்கோடுக்கு மாற்றப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் சூரல்மாலா மற்றும் முண்டக்காய் கிராமங்களை இணைக்கும் பெரிய பாலம் கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தற்காலிக கட்டமைப்பை பயன்படுத்தி 1,000க்கும் மேற்பட்டவர்களை ராணுவம் மீட்டுள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக என்டிஆர்எஃப் பணியாளர் ஒருவர் ANI செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஹெல்ப்லைன் எண்கள் 9656938689 மற்றும் 8086010833 வழங்கப்பட்டுள்ளன.
Read more ; முன்னாள் IAS அதிகாரி ப்ரீத்தி சுதன் UPSC தலைவராக நியமனம்..!! யார் அவர்?