டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை அனுப்பிய 5 சம்மன்களை ஏன் தவிர்த்தார் என வரும் 17ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியது. கடந்த பிப்ரவரி 2, ஜனவரி 31, ஜனவரி 19, டிசம்பர் 21, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்களை அனுப்பியது. ஆனால், தனக்கு அனுப்பப்பபட்ட சம்மன்கள் சட்டவிரோதமானவை என்றும், தன்னை கைது செய்ய மத்திய பாஜக அரசின் அழுத்தத்தில் அமலாக்கத்துறை சம்மன்களை அனுப்பி வருவதாகவும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
மேலும், அமலாக்கத்துறை அனுப்பிய அனைத்து சம்மன்களையும் பல்வேறு காரணங்களை கூறி அவர் நிராகரித்தார். இதனால், அதிருப்தி அடைந்த அமலாக்கத்துறை, கெஜ்ரிவால் சம்மன்களை நிராகரித்து வருவது குறித்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை ஏன் நிராகரித்தார் என்பதை வரும் 17ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி உத்தரவிட்டது.