சீனாவுக்கு ஆதரவான பிரசாரத்திற்காக பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட UAPA வழக்கில் அப்ரூவராக மாறி ஜாமீன் கோரிய நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவர் அமித் சக்ரவர்த்தியை விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தன்னை விடுவிக்கக் கோரி சக்ரவர்த்தி தாக்கல் செய்த மனுவை ஏற்று நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மா உத்தரவு பிறப்பித்தார். நியூஸ் கிளிக்கின் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் சக்ரவர்த்தி ஆகியோர் கடந்த ஆண்டு அக்டோபரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் புர்காயஸ்தா நீதிமன்ற காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சக்ரவர்த்தி அப்ரூவராக மாறிய பிறகு கைது செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார்.
அக்டோபர் 03, 2023 தேதி அன்று நியூஸ் கிளிக் நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்களின் வீடுகளில் டெல்லி போலீசார் சோதனை நடத்தினார். 37 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் என சந்தேகத்திற்கிடமான 46 பேரிடம் UAPA சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்றது. மேலும் அவர்களின் மின்னனும் சாதனங்களும் கைப்பற்றப்பட்டது.
சீனாவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களை முன்னெடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க பில்லியனர் நெவில் ராய் சிங்கமிடம் இருந்து பணம் பெற்றதாக நியூயார்க் டைம்ஸின் அறிக்கையை தொடர்ந்து நியூஸ் கிளிக் நிறுவனம் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்ட புரகாயஸ்தா மற்றும் சக்ரவர்த்தி ஆகியோரை 7 நாட்கள் போலீஸ்காவளி வைக்கக் கோரிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து புரகாயஸ்தா மற்றும் சக்ரவர்த்தியின் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட புர்காயஸ்தா மற்றும் சக்ரவர்த்தி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இருப்பினும், சக்ரவர்த்தி அப்ரூவரான பிறகு தனது மனுவை வாபஸ் பெற அனுமதிக்கப்பட்டார்.
சமீபத்தில், பிரபீர் புர்காயஸ்தாவை கைது செய்த பின்னர் அவரது வழக்கறிஞருக்கு தெரிவிக்காமல் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்துவதில் டெல்லி காவல்துறையின் அவசரம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.