மின்கட்டண உயர்வை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
தமிழக அரசின் மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் என்றும், அதைக்கண்டித்து தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, அதிமுகவினர் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் சண்முகம் சாலையில் மாவட்டச் செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் டி. கே.எம்.சின்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. கனிதா சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர். மதுரவாயலில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியதுடன், மின் கட்டணத்தையும் குறைக்க வலியுறுத்தினர். கன்னியாகுமரியில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தலைமையிலும், தேனியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நாளை (புதன்கிழமை) அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை காலை 10 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு முதன் முதலாக நடத்தப்படும் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் இதுவாகும். எனவே, நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக மூத்த தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மற்றும் சென்னை புறநகரை சேர்ந்த 9 மாவட்ட அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். 9 மாவட்ட அதிமுகவினர் ஒரே இடத்துக்கு வருவதால், நாளை காலை கலெக்டர் அலுவலக பகுதியில் மிகப்பெரிய அளவில் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. தொண்டர்கள் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை ஆர்ப்பாட்டத்துக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது.