ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும், அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் சுதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆனந்த் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும், ஓபிஎஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கோரவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.