நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வருபவர் தனுஷ். பவர் பாண்டி, ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும் இதில் அனிகா சுரேந்தர், ப்ரியா வாரியர், மாத்யூ தாமஸ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இது ஒரு வழக்கமான காதல் கதை என்று தனுஷ் கூறுவதுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. ஹீரோ ஒரு செஃபாக பணிபுரிகிறார். அவருக்கு ஒரு காதலி என கதை விரிகிறது.
மறுபுறம் ஹீரோவின் முன்னாள் காதலியின் திருமணத்தில் அவர் கலந்து கொள்வது போன்ற காட்சிகள் உள்ளது. காதலுக்கும் காதல் தோல்விக்கும் இடையே ஹீரோ சிக்கி தவிக்கும் கதையே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் கதை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. “ஜாலியா வாங்க, ஜாலியா போங்க” என்று தனுஷ் கூறுவதுடன் ட்ரெய்லர் முடிகிறது. இந்த ட்ரெயிலரில் பெரும்பாலும் ஜாலியாகவே நகர்வதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.