ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 75-ஆவது சுதந்திர தின உரையில் மக்களிடையே காணப்படும் இரத்த சோகையை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் பொதுவிநியோக திட்டம், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்திற்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்தார். தருமபுரி மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதிய அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பாக நியாயவிலை அங்காடிகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்ய தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம்:
செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் இரத்த சோகை மற்றும் நுண்ணூட்ட சத்து குறைபாட்டை போக்க, இரும்பு சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் தயாரிக்கப்பட்டு, அவை சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசி அதே ௬வை, அதே தோற்றம் மற்றும் அதே சமையல் முறையைக் கொண்டது. மேலும் செறிவூட்டப்பட்ட அரிசி அதிக சத்துக்கள் கொண்டது.
