தர்மபுரி அருகே சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் மரகண்டஹள்ளி அடுத்த கவுண்டன் பாறை கொட்டாய் கிராமத்தைச் சார்ந்தவர் விவசாயி முருகேசன். இவர் தனது விவசாய நிலங்களை விலங்குகள் தாக்காமல் இருப்பதற்காக சட்டத்திற்கு புறம்பாக மின்வேலிகளை அமைத்திருக்கிறார். இந்நிலையில் இவரது தோட்டத்திற்குள் இரண்டு குட்டி யானைகளை கொண்ட ஐந்து யானைகள் புகுந்துள்ளன. அப்போது எதிர்பாராத விதமாக மூன்று யானைகள் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
தாய் யானை உயிரிழந்தது தெரியாமல் இரண்டு குட்டி யானைகளும் அவற்றை சுற்றி சுற்றி வந்திருக்கின்றன. இந்நிலையில் யானைகள் இறந்த விபரம் அறிந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக மின்வேலிகளை அமைத்திருந்த விவசாய முருகேசன் கைது செய்யப்பட்டார். மேலும் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியதால் இரண்டு குட்டி யானைகளும் காட்டுக்குள் தப்பிச் சென்றன. தாய் யானை இறந்தது தெரியாமல் அவற்றை சுற்றி சுற்றி வந்த குட்டி யானைகள் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.