பிரபல இயக்குநரும், காமெடி நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட பல குடும்ப பின்னணி கொண்ட படங்களை இயக்கியவர் டிபி கஜேந்திரன். சென்னை சாலிகிராமத்தில் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் கஜேந்திரனின் உடலுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மறைந்த டி.பி.கஜேந்திரன் மற்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இருந்தே நெருக்கமான நண்பர்களாக அவர்கள் இருக்கும் நிலையில் கஜேந்திரன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் அறிக்கையும் வெளியிட்டு இருக்கிறார் “எனது கல்லூரி தோழர், இனிய நண்பர்” என அவரை பற்றி ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார்.

சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த சில வருடங்களாக கஜேந்திரன் சிகிச்சையில் இருந்த நிலையில் முக.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார். அவர் இறக்கும் சில வாரங்களுக்கு முன்பு கூட அவரை நேரில் சந்தித்து முக.ஸ்டாலின் பேசினாராம். ”கல்லூரியில் தமிழ் மீடியம் பொலிடிகல் சயின்ஸ் படிக்கும்போது ஸ்டாலின் ரொம்ப ஷை டைப் என்பதால் யாருடனும் அதிகம் பேச மாட்டாராம். அந்த கிளாசில் மொத்தமே 7 பேர் தான் என்பதால் அதிகம் கலகலப்பு இருக்காது. ஆனால் நாங்கள் நன்றாக பழகினோம். முதலமைச்சர் பையன் என்கிற திமிர் கொஞ்சமும் இல்லாமல் பேசுவார் ஸ்டாலின்” என கஜேந்திரன் முன்பு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.