பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி ஸ்னூக்கர் வீரர் மஜித் அலி (28). ஆசிய அளவில் ஸ்னூக்கர் போட்டிகளில் பங்குபெற்று 21 வயதுக்குட்பட்டோருக்கான வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் பல சர்வதேச நிகழ்வுகளில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், தேசிய சர்க்யூட்டில் முதல் தரவரிசை வீரராக இருந்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் வியாழக்கிழமை அன்று வீட்டிலேயே மரம் வெட்டும் கருவியால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சிறுவயதிலிருந்தே அதிகப்படியான மன அழுத்தத்தில் இருந்துவந்த அவர், தற்போது தற்கொலையில் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார். அவருடைய மரணம் குறித்து தெரிவித்திருக்கும் அவரின் சகோதரர் உமர், “இதை எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை, ஏனென்றால் அவருடைய உயிரை மாய்த்துக்கொள்வார் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்த்ததில்லை” என்று கூறியுள்ளார்.
மஜித் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் போட்டி அமைப்பின் தலைவரான ஆலம்கிர் ஷேக், “மஜித் மிகவும் திறமையானவர். . பாகிஸ்தானுக்கு இன்னும் பல விருதுகளை கொண்டு வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். தற்போது அவருடைய இழப்பானது ஒட்டுமொத்த சமூகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” என்று கூறினார். மேலும் மஜித்தின் மரணத்திற்கு நிதிப்பிரச்னை காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்பட்ட நிலையில், அவருக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை என்பதையும் ஷேக் தெளிவு படுத்தியுள்ளார். இருப்பினும் சமூக வலைதளங்களில் பலரும் அவர் நிதிப்பிரச்னை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.