இந்திய ரயில்வே நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது.. ஏனெனில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் உள்ளது.. அதாவது சுமார் 8,000 ரயில் நிலையங்கள் உள்ளன. பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கில் ரயில் நிலையங்கள் உள்ளன.. ஆனால் இந்தியாவில் ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டுமே உள்ள மாநிலம் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்..

ஆம்.. மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டுமே உள்ளது.. மிசோரம் மாநிலத்தில் உள்ள கோலாசிப் மாவட்டத்தில், பைராபி நகரில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது. பயணிகள் ரயில்கள் தவிர, சரக்கு ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன.. மிசோரமில் சுமார் 11 லட்சம் மக்கள் உள்ள நிலையில், வேறு ரயில் நிலையம் இல்லாததால், அம்மாநில மக்கள் அனைவரும் பயணம் செய்ய பைராபி ரயில் நிலையத்தை அடைகின்றனர்.
மொத்தம் 3 நடைமேடைகளை மட்டுமே கொண்ட பைராபி ரயில் நிலையத்தில் வசதிகள் மிக குறைவாகவே உள்ளது. இந்த நிலையத்தில் ரயில்கள் செல்ல 4 ரயில் பாதைகள் உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு இந்த ரயில்நிலையம் மறு சீரமைப்பு செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.. இதனால் பழைய வடிவத்தை விட, அளவில் ச்ற்று பெரியதாக உள்ளது.. பைராபி ரயில் நிலையம் 84 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அசாமில் உள்ள கடகால் சந்திப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிசோரமில் மற்றொரு ரயில் நிலையம் அமைக்க இந்திய ரயில்வே முன்மொழிந்துள்ளது..
இந்தியாவின் வடகிழக்கு பகுதி இரயில்வே வழியாக முழுவதுமாக இணைக்கப்படவில்லை என்பதால், மத்திய அரசு, ரயில் இணைப்பை மேம்படுத்த பல மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. உதாரணமாக, பைராபி-சாய்ராங் ரயில் பாதை திட்டம் (51.38 கிலோமீட்டர்) நிறைவடைய உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.. இந்த திட்டம் மிசோரம் தலைநகர் ஐஸ்வாலுடன் இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது…