திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பணப் பரிவர்த்தனைக்கு பதில், ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கோவில் நிர்வாகம் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பணப்பரிவர்த்தனைகளுக்கு பதில், டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க தேவஸ்தான முடிவு செய்துள்ளது. அதன்படி கோவில்களில் சேவை டிக்கெட், பிரசாதம், பஞ்சகவ்ய பொருள்கள், டைரி மற்றும் காலண்டர்கள் வாங்கும் பக்தர்களின் வசதிக்காக போன் பே, கூகுள் பே மற்றும் கியூ ஆர் கோடு ஸ்கேனர்,டெபிட் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பணம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேவஸ்தானத்துடன் இணைந்த கோவில்களில் பக்தர்களுக்கு பணப் பரிவர்த்தனைக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளம், ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் மூலமாகவும் திருப்பதி ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் பக்தர்கள் அதிகம் செல்லும் முக்கிய இடங்களில் தேவஸ்தான கோவில்கள் பற்றி தெரிவிக்க தகவல் பலகைகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் எளிதாக கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய முடியும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி வீரபிரம்மம் கூறியுள்ளார்.