உணவு இல்லாமல் இருந்து விடுவேன், ஆனால் டீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று கூறுபவர்கள் அநேகர். நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 டீ வரை குடிக்கும் டீ பிரியர்கள், இல்லை டீ வெறியர்கள் அநேகர் உண்டு. டீ குடிப்பதால் ஒரு புத்துணர்ச்சி கிடைப்பது உண்மை தான். ஆனால் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை பலர் பல நேரங்களில் மறந்து விடுகின்றனர். ஆம், அதிகமாக டீ குடிப்பதால் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகிறது. டீ அதிகமாக குடிப்பதால் உடலுக்கு என்ன தீமைகள் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
அதிகமாக டீ குடிப்பதால், பல் சிதைவு ஏற்படுகிறது. டீயில் உள்ள டானின்கள், பற்களை கறைப்படுத்துவதோடு, பல் சிதைவை ஏற்படுத்தும். தேநீரில் சர்க்கரை சேர்ப்பதால், பல் சொத்தை ஏற்படும் அபாயமும் உள்ளது. அது மட்டும் இல்லாமல், டானின்கள் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று வலிக்கு வழிவகுக்கும். டீ அதிகம் குடிக்கும் போது அதில் உள்ள காஃபின், தலைவலி, சோர்வு மற்றும் எரிச்சலை உண்டாக்குகிறது. மேலும், மாலை அல்லது இரவில் டீ குடிப்பதால் அதில் உள்ள காஃபின், தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
காஃபின் அதிகமாக உடலுக்குள் செல்லும்போது, நம்மை அதிகமாக கவலை பட தூண்டும். அதிகமாக டீ குடிப்பதால் நடுக்கம், பதட்டம் போன்றவை ஏற்படும். டீ, ஒரு டையூரிடிக் ஆகும். இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நீரழிவு நோய்க்கு வழிவகுக்கும். மேலும், அதிகம் டீ குடிப்பதால் நமது உடலில் உள்ள இரும்பு சத்தை குறைத்து இரத்த சோகையை ஏற்படுத்தி விடும். டீ, நமது உடலில் உள்ள இரும்பு சத்தை குறைப்பதோடு கால்சியம், மெக்னீசியம் போன்ற பிற கனிமங்களையும் குறைத்துவிடுகிறது. அதனால் நாம் டீயை குறைந்த அளவு எடுத்து கொள்வது நல்லது.