விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராம நிர்வாக அலுவலகம் அருகே கார்த்திக், வீரபாண்டி மற்றும் அசோக் ஆகியோர் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தனது மாடுகளை பிடித்து சென்றிருக்கிறார் காளீஸ்வரி. பட்டாசு சத்தத்தில் மாடுகள் மிரண்டுள்ளன. இதனால் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களை கண்டித்து இருக்கிறார் காளீஸ்வரி.
இது தொடர்பாக அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது முனியராஜ் என்பவர் இருதரப்பையும் சமாதானம் செய்ய முயன்று இருக்கிறார். இதனால் கார்த்திக் தரப்பிற்கும் முனியராஜிற்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் தரப்பினர் அவரது தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் தனது அண்ணனுடன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் தகராறு செய்தது தொடர்பாக அவர்களிடம் தட்டி கேட்பதற்கு முனியராஜன் தம்பி சுமை தூக்கும் தொழிலாளியான பொன் பாண்டி என்பவர் கார்த்திக் தோட்டத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு ஏற்பட்ட தகராறில் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் பொன் பாண்டியை அடித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் தோட்டத்திற்கு சென்று இறந்த பொன் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை அவர்களைத் தேடி வருகிறது.