பாரம்பரிய நெல் விதைகள் 2 மெட்ரிக் டன் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தனது செய்தி குறிப்பில்; வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் தருமபுரி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகள் 2 மெட்ரிக் டன் 50 சதவீத மானியத்தில் வழங்க அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களின் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த சட்டப்போவை வேளாண்மை பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் நல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பாரம்பரிய நெல்ரகங்களான தூயமல்லி, கருப்புக்கவுணி மற்றும் சீரக சம்பா ஆகிய பாரம்பரிய நெல்ரகங்கள் 2 டமட்ரிக் டன் விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் விநியோகிப்பதற்காக அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அரசு விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.25/-க்கு நிர்ணயம் செய்யப்பட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பாரம்பரிய நெல்விதைகள் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளன.
மொத்த விலையில் 80சதவீதம் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் பட்டியலின மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும். இதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.