கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக இரண்டு குழந்தைகளுக்கு எலிபேஸ்ட் கொடுத்ததில், 9 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள நிலையில், தாய் நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே போடம்பட்டியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாதேஷ் (27). இவரது மனைவி ஞானமலர் (21). 4 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டரை வயதில் பிரபாஷ் என்ற மகனும், ஆதிரா என்ற 9 மாத பெண் குழந்தையும் இருக்கிறார்கள். மாதேஷ் தினமும் கூலி வேலைக்காக வெளியே சென்று விடும் நிலையில், தங்கராஜ் என்ற இளைஞருடன் ஞானமலருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாதேஷ் வேலைக்கு கிளம்பியதுமே, தங்கராஜ் வீட்டுக்கு வந்துவிடுவாராம். அதற்கு பிறகு, இருவரும் ஜாலியாக இருந்து வந்துள்ளனர். ஒருநாள் இந்த விஷயம் அறிந்து மாதேஷ், மனைவியை கண்டித்துள்ளார்.

அத்துடன், கள்ளக்காதலை கைவிடும்படியும் அட்வைஸ் செய்துள்ளார்.. ஆனால், ஞானமலர், மாதேஷ் பேச்சை கேட்கவில்லை.. மேலும், தனக்கு தொடர்ந்து அட்வைஸ் செய்து கொண்டிருந்ததால், ஆத்திரம் அடைந்து, கள்ளக்காதலனிடம் இதை பற்றி புலம்பி கொண்டே வந்தார்.. “குழந்தைகளை காரணம் காட்டிதான், கள்ளக்காதலை கைவிடும்படி சொல்கிறார்.. அதனால், குழந்தைகளை கொன்றுவிடலாம்” என்று ஞானமலர் தங்கராஜிடம் கூறியுள்ளார்.. உடனே தங்கராஜ், எலிபேஸ்ட்டை வாங்கி வந்து தரவும், அதை குழந்தைகள் பிரபாஷ், ஆதிரா ஆகியோருக்கு தந்துவிட்டார்..

பிறகு, மாதேஷுக்கு போன் செய்து, நானும் குழந்தைகளும் எலிபேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என்று அழுதவாறே சொல்லி உள்ளார்.. இதனால் பதறிப்போன மாதேஷ், வீட்டுக்கு வந்து பார்த்தால், 3 பேருமே மயங்கி விழுந்திருந்தனர்.. அவர்களை உடனடியாக மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. ஆனால், சிகிச்சை பலனின்றி 9 மாத பெண் குழந்தை ஆதிரா பரிதாபமாக இறந்துவிட்டது.. இன்னொரு குழந்தைக்கு சிகிச்சை நடக்கிறது.. மருத்துவர்கள் ஞானமலரை பரிசோதனை செய்ததில் அவர் எலிபேஸ்ட் சாப்பிடவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டபோதுதான், குழந்தைகளுக்கு எலிபேஸ்ட்டை தந்தது உறுதியானது.. இறுதியில், ஞானமலர் மற்றும் கள்ளக்காதலன் தங்கராஜ் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.. கைதான ஞானமலர் சேலம் பெண்கள் ஜெயிலிலும், தங்கராஜ் சேலம் மத்திய ஜெயிலிலும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.