புதுமைப் பெண் திட்ட தொடக்க விழாவுக்கு கெஜ்ரிவாலை அழைத்த விவகாரத்தில் திமுக மீது காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதே நிகழ்ச்சியில் 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரி பள்ளிகள் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கெஜ்ரிவாலை திமுக அழைத்தது காங்கிரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்று உள்ளது. காங்கிரசுக்கு ஆம் ஆத்மியும், பாரதிய ஜனதாவும் எதிராளிகள். கூட்டணியில் இருந்து கொண்டு தங்கள் எதிராளியை அழைத்து இருப்பது காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை உருவாக்கி உள்ளது. 2024 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே கூட்டணிகள் அமைப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. பெயர் சொல்ல விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ”எங்களுக்கு பாஜகவும், ஆம் ஆத்மியும் ஒன்றுதான். கடந்த தேர்தலில் ராகுல் பிரதமர் வேட்பாளர் என்று முதல் முதலில் அறிவித்தது திமுக தான். இந்த நிலையில் அடுத்த தேர்தலை சந்திக்க தயாராகும் போது ஆம் ஆத்மியுடன் நெருங்கி செல்வது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது” என்றார்.

தேர்தல் நேரத்தில் ராகுலுக்கு பக்கபலமாக திமுக இருக்குமா? என்ற கேள்வி எழுவதாகவும் கூறுகிறார்கள். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை வருகிற 7ஆம் தேதி ராகுல் பாதயாத்திரை செல்கிறார். இந்த யாத்திரை மூலம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்றும் பாஜகவுக்கு எதிராக மக்களை திரட்ட முடியும் என்றும் காங்கிரஸ் நம்புகிறது. பாதயாத்திரை தொடங்கும் முன்பு கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசுகிறார். அந்த கூட்டத்தில் முக.ஸ்டாலினும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பங்கேற்கவில்லை. பாத யாத்திரையை மட்டுமே அவர் தொடங்கி வைப்பதாக தெரிகிறது.