திமுக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரிக்கு எதிரான வழக்கில் வருகின்ற 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. 2011ஆம் ஆண்டு தேர்தலின் போது தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வருகின்ற 12ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
2011 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலின் போது மதுரை மேலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார் அழகிரி. அப்போது வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக அதிமுக கட்சியினர் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி தேர்தல் அதிகாரி மற்றும் தாசில்தாராக பதவி வகித்து வந்த காளிமுத்து மற்றும் தேர்தல் அதிகாரிகள், மு.க அழகிரி உள்ளிட்டோரை புகைப்படம் எடுக்க முயன்றனர்.
அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு மு.க அழகிரி மற்றும் திமுகவினர் தன்னை தாக்கியதாக தாசில்தார் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் உட்பட திமுக கட்சியைச் சேர்ந்த 21 பேர் மீது, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மு.க அழகிரிக்கு முன் ஜாமின் வழங்கப்பட்டது.
மேலும் வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 13 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் மு.க அழகிரி மற்றும் மன்னன் ஆகியோர் ஆஜராகி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வருகின்ற 12ஆம் தேதி வெளியாகும் என மதுரை மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார். 13 ஆண்டுகளுக்குப் பின் தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாக இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.