DMK files case: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 ஐ எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஏ. ராஜா தாக்கல் செய்துள்ளார். அவர் மக்களவை எம்.பி.யும், வக்ஃப் மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன்னாள் உறுப்பினருமானவர். இந்த சட்டம் தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளையும், நாட்டின் பிற பகுதிகளில் 20 கோடி முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளையும் மீறுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டமானது மதரீதியான பிரச்சனைகளை எழுப்புவது மட்டுமில்லாமல், தேசிய அளவிலான பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். இதனால் சட்டம் ஒழுங்கில் மிகப்பெரிய பிரச்னை நாடு முழுவதும் ஏற்படும். எனவே இந்த விவகாரத்தில் நீதி வேண்டும் என்பதே எங்களது வழக்கின் முக்கிய சாராம்சமாக உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா-2025, நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை முறையாக கருத்தில் கொள்ளாமலும், அதில் இருந்த திருத்தம் நிறைவேற்றிட பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும், ஒன்றிய அரசால் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக எம்.பி.க்கள் தரப்பில் எழுப்பப்பட்ட கருத்துக்கள் எதுவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ், பிற எதிர்க்கட்சிகள் வழக்கு: ஏப்ரல் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்ற வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதா முஸ்லிம் சமூகத்திற்கு பாரபட்சமானது என்றும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் வாதிட்டு, காங்கிரஸ் எம்.பி முகமது ஜாவேத் ஏப்ரல் 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஏப்ரல் 4 ஆம் தேதி, AIMIM தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசியும் வக்பு திருத்த மசோதா 2025 ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
ஆம் ஆத்மி கட்சி (AAP) எம்எல்ஏ அமனத்துல்லா கான், வக்ஃப் (திருத்த) மசோதா 2025-ஐ எதிர்த்து சனிக்கிழமை உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இந்த மசோதா முஸ்லிம்களின் மத மற்றும் கலாச்சார சுயாட்சியைக் குறைப்பதாகவும், தன்னிச்சையான நிர்வாகத் தலையீட்டை செயல்படுத்துவதாகவும், அவர்களின் மத மற்றும் தொண்டு நிறுவனங்களை நிர்வகிக்க சிறுபான்மையினரின் உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் ஆம் ஆத்மி எம்எல்ஏ கான் வாதிடுகிறார்.
வக்பு திருத்த சட்ட மசோதா மாநிலங்களவையில் 128 உறுப்பினர்கள் ஆதரவாகவும் மக்களவையில் 288 உறுப்பினர்கள் ஆதரவுடனும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதாவுக்கு கடந்த 5ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதனை தொடர்ந்து மசோதா சட்டமாக்கப்பட்டது.இதை எதிர்த்து நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Readmore: “பழிவாங்கும் மனப்பான்மை”…! தேசிய ஒருங்கிணைப்பாளரை கதறவிட்ட பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்…!