பாரதிய ஜனதா மாநில துணை தலைவர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:- திமுக அமைச்சர் துரைமுருகன் நேற்று ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது, பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுப்பதாக சொன்னதை சீக்கிரம் நிறைவேற்றி விடுவோம். “சில்லறை மாற்றி கொண்டிருக்கிறோம்” அம்மாவுக்கு ஆயிரம், பெண்ணுக்கும் ஆயிரம் என 2000 ரூபாய் கொடுக்கும் ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்று பேசினார்,
மற்றொரு திமுக அமைச்சர் பொன்முடி “ஓசி, ஓசி பஸ்சில போறீங்க” என பெண்களை கிண்டல் செய்து ஏளனமாக பேசினார். இந்நிலையில், இலவச பஸ்ஸில் செல்லும் பெண்களை நடத்துனர்கள் மரியாதைக் குறைவாக பேசும் வீடியோ காட்சிகள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. ஏதோ, திமுகவினர் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைத்து மக்களுக்கு பணம் கொடுப்பது போல ஏளனமாக இந்த அரசியல் அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ் நாட்டு பெண்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அரசு மது விற்பனை செய்யும் அவலத்தை நிறுத்த வேண்டும். மதுவினால் பெண்கள் படும் துயரம் மிக கொடுமையானது என்பது தெரிந்தும், மது விற்பனையை அதிகரிக்க திட்டமிடுவது தமிழர்களுக்கும், தமிழ் பெண்களுக்கும் செய்யும் மிக பெரிய துரோகம். இது எல்லாவற்றையும் விட, மூத்த அமைச்சர்கள் “ஓசி, ஓசி” என்றும், “சில்லறை மாற்றி கொண்டிருக்கிறோம்” என்றும் மக்களை ஏளனம் செய்வது மிக பெரிய கொடுமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.