டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”திமுக ஆட்சி அமைத்த இரண்டு ஆண்டு காலத்தில் இதுவரை 306 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் செயல்படுவது போல் சில பத்திரிக்கைகள் செய்திகளில் வெளியிடுவது வேதனை அளிக்கிறது. காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மால் ஷாப்பில்தான் இந்த கடை செயல்படுகிறது. இந்த கடைக்குள்தான் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் திறந்த வெளியில் தானியங்கி இயந்திரம் செயல்படுகிறதா என்பதை தெரிந்து சரியான தகவல்களுடன் செய்தி வெளியிட வேண்டும்.
21 வயதுக்கு குறைவாக யாராவது இதில் மது வாங்க முடிகிற அளவுக்கு உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். எந்த மாநிலத்திலும் இது போன்ற தானியங்கி இயந்திரம் இல்லையா..? 29% நாடாளுமன்ற வருகை பதிவு கொண்ட, நாடாளுமன்றத்திற்கு போகாதவர்கள் இது குறித்து செய்தி வெளியிடுகிறார்கள். இந்த கடை எங்கு உள்ளது, அது எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து செய்தி வெளியிடுங்கள். 2019 இல் தான் இந்த தானியங்கி இயந்திரம் திறக்கப்பட்டது. 2013, 2014, 2018 என 4 ஆண்டுகளில் 4 கடைகளில் அதிமுக ஆட்சியில் தான் திறக்கப்பட்டது. டாஸ்மாக் நிறுவனம் இந்த தானியங்கி இயந்திரத்திற்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை.
அன்புமணி உட்பட யாராவது நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதும் பூரண மது விலக்கு கொள்கையை கொண்டு வர வேண்டியதுதானே அதற்கு தைரியமில்லை இங்கு வந்து அரசியல் செய்கிறார்கள். கடந்த அரசாங்கத்தில் தொடங்கப்பட்ட கடைகளை அறிவிக்கப்படாமல், 90 கடைகளுக்கு மேல் மூடப்பட்டுள்ளது. சட்டசபையில் 500 கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் உண்மைக்கு மாறாக செய்திகள் பரப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் மூலம் கிடைக்கும் இந்த வருமானத்தை கொண்டு அரசு நடத்த வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு இல்லை. கொரோனா காலத்தில் பெங்களூருவில் மது கடைகள் ஒரு நாள் கூட மூடவில்லை” என தெரிவித்தார்.