கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, கோவையைச் சேர்ந்த வாலிபருடன் கடந்த 2021இல் திருமணம் நடந்தது. 100 பவுன் நகை, 25 கிலோ வெள்ளிப் பொருட்கள் சீர்வரிசையுடன் திருமணம் நடந்திருக்கிறது. இந்நிலையில், திருமணத்திற்கு பின்னர் கணவருக்கு கஞ்சா பழக்கம் இருப்பது அந்தப் பெண்ணுக்கு தெரியவந்திருக்கிறது. இதை அந்த நபரின் பெற்றோர் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். கஞ்சா இல்லாமல் தாம்பத்திய உறவில் கணவனால் ஈடுபட முடியவில்லை என்பதையும் தெரிந்து கொண்டிருக்கிறார். கணவர் கஞ்சா போதையில் இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்வதை கண்டு அந்த பெண் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.
அதுமட்டுமின்றி, ஆபாச வீடியோவை காட்டி அந்த வீடியோக்களில் உள்ளது போலவே உறவு கொள்ளச் சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு சென்ற இடத்தில் குளித்துவிட்டு உடைமாற்றும் போது நிர்வாணமாக கணவர் போட்டோ எடுத்திருக்கிறார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனே அவசரமாக போர்வையை சுற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியே ஓடி இருக்கிறார். இதை கவனித்த மாமனாரும், மாமியாரும் அந்தப் பெண்ணை நிர்வாணமாக இழுத்துச் சென்று அறையில் தள்ளி பூட்டியுள்ளனர். இந்த கொடுமைக்கு எல்லாம் உச்சகட்டமாக கடந்த 2022இல் பீளமேடு பகுதியில் உள்ள நண்பரின் செட்டுக்கு மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு தான் மனைவியை நிர்வாணமாக எடுத்த போட்டோக்களை காட்டி இருக்கிறார். அந்த போட்டோக்களை காட்டி மிரட்டி நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து உறவில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் இந்த போட்டோக்களை உன் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், அங்கிருந்து தப்பித்து தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். கணவரும், அவரது குடும்பத்தினரும் செய்த இந்த கொடுமைகள் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யாததால் கமிஷனரை சந்தித்து அந்த புகாரை கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு நடந்து கொண்டிருந்ததால் இந்த வழக்கை இழுத்தடித்து வந்திருக்கிறார்கள். இதன் பின்னர் தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் அனுப்பி இருக்கிறார். அதன் பின்னர் போலீசார் சமரசமாக செல்லுமாறு பேசி இருக்கிறார்கள். இதன் பின்னர்தான் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்து இருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். கணவரால் எடுக்கப்பட்ட என் நிர்வாண படங்கள் அளிக்கப்பட வேண்டும். போலீசார் அதைக் கூட செய்யாமல் இருக்கிறார்கள். அதை உடனே செய்ய சொல்ல வேண்டும் என்று கோரிக்கையை வைத்திருக்கிறார்.