ஒருவயதிற்கும் கீழ் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதால் அலர்ஜி உள்ளிட்ட புரத ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தாய்ப்பால் மூலம் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு, சர்க்கரை நீர், புரோட்டீன், மினரல் போன்ற சக்திகள் சரியான அளவில் கிடைக்கிறது. பச்சிளம் குழந்தைகளுக்கு சிறந்த உணவு தாயிடமிருந்து கிடைக்கக்கூடிய தாய்ப்பால்தான். தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. எனவே 6 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்கவேண்டும். ஆனால் சில நேரங்களில் தாய்ப்பாலுக்கு மாற்றாக மற்ற உணவை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதற்காக சில தாய்மார்கள் பசும்பால் கொடுக்கின்றனர். இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்த மருத்துவர்களின் விளக்கத்தை பார்க்கலாம்.
பசும்பால் கொடுக்கப்படும் 1 வயதிற்கு கீழான குழந்தைகளில் ஏழு சதவீதம் பேருக்கு அலர்ஜி ஏற்படுவதாக புதுச்சேரி லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவரான ஜெயராஜ் தெரிவித்துள்ளார். புரத ஒவ்வாமை என்று அழைக்கப்படும் பசும்பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதால் வயிற்று வலி, வாந்தி போன்றவை ஏற்படும். புரத ஒவ்வாமை ஏற்பட காரணம் பசும்பாலில் இருக்கும் பீட்டா – லேக்டோகுளோபுலின் என்ற புரதமாகும். தாய்ப்பாலில் இருக்கக்கூடிய முக்கியமான புரதம் ஆல்பா- லேக்டால்க்ளோபுலின் ஆகும். இந்த புரதம் குழந்தையின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதோடு குழந்தையின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வகை மொத்தம் தாய்ப்பாலில் 20 முதல் 25 சதவீதம் நிறைந்திருக்கும். ஆனால் பசும்பாலில் இந்த மொத்தம் இரண்டு முதல் ஐந்து சதவீதம் மட்டுமே இருக்கும் .
பசும்பால் புரத ஒவ்வாமையால் அவதிப்படும் குழந்தைகளுக்கு பசும்பாலிலிருந்து தயாரிக்கப்படும் பவுடர் பாலை கொடுக்க முடியாது என்பதால் ஸ்பெஷல் ஃபார்முலா பவுடர் பால் பச்சிளம் குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது. இவற்றில் தாய்ப்பாலை போன்று கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்து, புரதம், வைட்டமின்கள், மினரல்கள் என ஒப்பீட்டளவில் ஒன்றாக இருந்தாலும் தாய்ப்பாலில் இருக்கக்கூடிய ஆன்டி பாடிகள், நிணநீர் செல்கள், லேக்டோஃபெரின் இன்டர்ஃபெரான் போன்ற சத்துக்கள் ஃபார்முலா மில்க்கில் இருக்காது.