நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. வாழ்வில் ஏற்படும் டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் போன்றவற்றில் இருந்து விடுபட பலர் டீ, காஃபி போன்றவற்றை பருகுவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். அதிலும், சிலருக்கு எல்லாம் காலைப்பொழுது என்பது, டீ காபி இல்லாமல் அந்த நாளே தொடங்காது. அதனுடன் சேர்ந்து பிஸ்கட் சாப்பிடுவதையும் வழக்கமாக வைத்திருப்பார்கள். அவ்வாறு சேர்த்து சாப்பிடும் நபர்களுக்கு அதில் இருக்கும் பக்க விளைவுகள் என்பது தெரியாது. எனவே, இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
டீ, காஃபியுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவதனால் முதலில் உடல் பருமன் பிரச்சனை ஏற்படலாம். எப்படி என்றால், பிஸ்கட்டுகளில் ஹைட்ரஜன் ஏற்ற கொழுப்புகள் உள்ளது. இதனால் பிற்காலத்தில் உடல் பருமன் பிரச்சனை மற்றும் சரும பிரச்சனை போன்றவை ஏற்படலாம். மேலும், டீயிலும், பிஸ்கட்டிலும் சர்க்கரை சேர்க்கப்படுவதால், எதிர்காலத்தில் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது.
இது மட்டுமல்லாமல் நீரிழிவு நோயாளிகள், தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் டீயுடன் பிஸ்கட் சாப்பிடும் நடைமுறையை கைவிடுவது சிறந்த ஒன்றாக இருக்கும். அடுத்ததாக நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும். அதாவது சர்க்கரை நிறைந்த பானம், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும். எனவே, டீயுடன் பிஸ்கட்டை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி விரைவில் மோசமடையும்.
பொதுவாக பிஸ்கட்டுகள், சுத்திகரிக்கப்பட்ட மாவினால் தயாரிக்கப்படுகிறது. எனவே, இதில் நார்ச்சத்து சுத்தமாக இருக்காது. ஆகையால், இது மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும். இது மட்டுமல்லாது இதில் BHA மற்றும் BHT என இரு மூலக்கூறுகள் இருப்பது உடல் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும். இந்த இரு மூலக்குறுகளும் பிஸ்கட் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு சேர்க்கப்படுகின்றன.
இவை இரண்டும் நமது ரத்த செல்களுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும், குடல் பாதிப்பு, பசியின்மை மற்றும் பற்கள் சேதம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். முடிந்தவரை டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவது தவிர்ப்பது மேம்பட்ட ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.