கூகுள் பிளே (Google Play) ஸ்டோரில் இருந்த ஒரு ஸ்கிரீன் ரெக்கார்டிங் (Screen Recording App) ஆப் மூலம் யூசர்கள் உளவு பார்க்கப்பட்டதை கூகுள் (Google) நிறுவனம் கண்டறிந்து, அந்த ஆப்பை பிளே ஸ்டாரில் இருந்து நிரந்தரமாக நீக்கிவிட்டது. இருப்பினும், அந்த ஆப் 50,000 யூசர்களிடம் இருப்பதால், அவர்கள் ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.ஒருவேளை அந்த ஆப் உங்களிடம் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டிராய்டு (Android) போன் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் ஸ்கிரீன் ரெக்கார்டிங் ஆப்ஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். சில கம்பனி போன்களில் ஸ்கிரீன் ரெக்கார்டிங் ஆப் டிபால்ட்டாகவே வருகின்றன. இவை பெரும்பாலும் அங்கீகரிக்கப்பட்ட ஆப்ஸ்களாகவே இருக்கும்.
இதனால் பயப்பட வேண்டியது கிடையாது. ஆனால், தேர்ட் பார்ட்டி ஆப்ஸ்களை (Third Party Apps) பயன்படுத்தும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கிறது என்பதற்காக மட்டுமே ஏதாவது ஒரு ஆப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தவிட கூடாது. ஏனென்றால், கூகுள் நிறுவனமே பல ஆப்ஸ்கள், யூசர்களின் டேட்டாக்களை திருடுவதாகவும், அவர்களை உளவு பார்க்க பயன்படுத்தப்படுவதாகவும் கண்டறிந்து அவற்றை நீக்கி வருகிறது. இதுபோன்ற லட்சக்கணக்கான ஆப்ஸ்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை இன்ஸ்டால் (Install) செய்து வைத்திருக்கும், யூசர்கள் அவை நீக்கப்பட்டது தெரியாமலேயே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் டேட்டாக்கள் திருடப்பட வாய்ப்புள்ளது.
அந்த வரிசையில், கூகுள் பிளே ஸ்டோரில் நீண்ட ஆண்டுகளாக இருந்துவந்த ஒரு ஸ்கிரீன் ரெக்கார்டிங் ஆப் யூசர்களை உளவு பார்த்து வந்திருப்பதையும், இதன் மூலம் அவர்களின் டேட்டாக்கள் திருடுபோக வாய்ப்புள்ளதையும் கண்டறிந்த கூகுள் நிறுவனம் அந்த ஆப்பை நீக்கியிருக்கிறது. இந்த ஸ்கிரீன் ரெக்கார்டிங் ஆப்பை 50 ஆயிரம் பேர் பயன்படுத்திவருவது தெரியவந்துள்ளதால், உடனடியாக அந்த ஆப்பை அன்இன்ஸ்டால் (Uninstall) செய்யும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரெக்கார்டர் (iRecorder) என்னும் ஸ்கிரீன் ரெக்கார்டிங் ஆப்பே, யூசர்களை உளவு பார்த்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஐரெக்கார்டர் ஆப் 2019ஆம் ஆண்டு பிளே ஸ்டோரில் அறிமுகமானது.
அப்போது அதன் பாதுகாப்பு அம்சங்கள் கூகுள் விதிமுறைகளுக்கு ஏற்றதாக இருந்தது. ஆனால், 2022ஆம் ஆண்டில் அந்த ஆப் பல அப்டேட்களுக்கு பின் விதிமுறைகளை மீறியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த ஆப் AhRat என்னும் வைரஸ் பாதிப்பில் சிக்கியிருக்கிறது. இந்த வைரஸ் பாதிப்பை அறிந்த ஆண்டிராய்டு சைபர் செக்யூரிட்டி நிறுவனங்களான ஆப் டிஃபன்ஸ் அலையன்ஸ் (App Defense Alliance) மற்றும் இஎஸ்இடி (ESET) மே 23ஆம் தேதி அன்று கூகுள் நிறுவனத்திடம் அதை தெரியப்படுத்தியுள்ளன. இதையடுத்து உடனடியாக அந்த ஆப் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த ஆப் நீக்கப்பட்டபோது 50 ஆயிரம் யூசர்கள் அந்த ஆப்பை இன்ஸ்டால் (Install) செய்து வைத்திருந்ததால், அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் உங்களிடம் இருந்தால், உங்களின் இருப்பிடத்தை ஹேக் செய்து கண்டுபிடித்துவிடலாம், அதோடு உங்களின் ஆடியோ, வீடியோ, போட்டோக்களை எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆகவே, ஐரெக்கார்டர் ஆப் இருக்கும்பட்சத்தில் அதை உடனே அன்இன்ஸ்டால் செய்துவிடுங்கள்.