2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை அணியுடன் மோதியது. இறுதி பந்து வரை பரபரப்பாக சென்ற போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது.
இதன் மூலம் ஐபிஎல்லில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணி என்ற பெருமையை சென்னை கொண்டுள்ளது. இந்தாண்டு கோப்பை வென்ற சென்னை அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.20 கோடி வழங்கப்பட்டது. 2ஆம் இடம் பிடித்த குஜராத் அணிக்கு ரூ.13 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. தொடரில் அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப்பை கைப்பற்றி சாதனை புரிந்த சுப்மன் கில்லிற்கு ரூ.10 லட்சமும், அதிக விக்கெட் எடுத்து பர்பிள் கேப்பை சொந்தமாக்கிய முகமது ஷமிக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டேவான் கான்வே ரூ.5 லட்சம் பரிசு தொகையை தட்டிச் சென்றார்.
2008 முதல் ஐபிஎல் சீசனில் கோப்பை வென்ற அணிக்கு ரூ.4.8 கோடி பரிசு வழங்கப்பட்டது. தற்போது 15ஆவது சீசன் நடைபெற்ற நிலையில் இந்த பரிசு தொகை ரூ.20 கோடியாக உயர்ந்துள்ளது. முதல் இரண்டு சீசனில் ரூ.4.8 கோடியாக இருந்த பரிசு தொகை, 2010இல் நடந்த மூன்றாவது சீசனில் ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டது. 2014இல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இந்த பரிசுத் தொகை ரூ.15 கோடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் 2 ஆண்டுகள் கழித்து 2016 சீசனிலேயே கோப்பை வென்ற அணியின் பரிசு தொகையானது ரூ.20 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டது. அதேபோல, முதல் சீசனில் ரன்னர் அப் அணிக்கு வழங்கப்பட்ட ரூ.2.4 கோடி என்ற பரிசுத் தொகை தற்போது ரூ.13 கோடியாக உயர்ந்துள்ளது.