PM Modi: 2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய தேர்தல் தற்போதுவரை 4 கட்டங்கள் முடிவடைந்துள்ளது. இந்தநிலையில், 5 வது கட்டத் தேர்தல், 8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் மே 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 8 மாநிலங்களின் 49 தொகுதிகளில் மொத்தம் 695 பேர் போட்டியிடுகின்றனர். பீகார், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், லடாக், மகாராஷ்டிரா, ஒடிஷா, உ.பி, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 5-வது கட்டமாக மே 20-ந் தேதி இத்தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம், வாராண தொகுதியில் 7-வது மற்றும் இறுதி கட்டமாக ஜூன் 1-ல் வாக்குப்பதிவு நடக்கிறது. பிரதமர் மோடி களமிறங்கும் தொகுதியான வாரணாசி மிகவும் கவனம் பெற்றிருந்த நிலையில், அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.
வாரணாசியில் 3-வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். வாராணயில் பிரதமர் மோடிக்கு எதிராக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராயை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது.
இந்தநிலையில், பிரதமர் மோடி தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள மொத்த சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி. இதில் பெரும்பகுதி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள ரூ.2.86 கோடி நிரந்தர வைப்புத்தொகை. கையிலிருக்கும் ரொக்கம் ரூ.52.920. காந்திநகர் மற்றும் வாரணாசியில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் உள்ள தொகை ரூ.80.304. தேசிய சேமிப்பு சான்றிதழில் ரூ.9.12 லட்சம் முதலீடு. ரூ.2.68 லட்சம் மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19 ஆண்டில் ரூ.11.14 லட்சமாக இருந்த பிரதமரின் வருமானம், 2022-23-ல் ரூ.23.56 லட்சமாக உயர்ந்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தல்களின்போது பிரதமர் தனது பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த மொத்த வருமானமும் இந்த முறை அதிகரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.2.51 கோடி என்றும், 2014-ம் ஆண்டு ரூ.1.66 கோடி என்றும் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடி தனக்கு சொந்தமாக எந்த நிலமும், பங்குகளும், மியூச்சுல் ஃபண்ட் முதலீடும் இல்லை என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரமாண பத்திரத்தில் பிரதமர் மோடி தனது மனைவி பெயர் யசோதாபாய் என்றும், மனைவி என்ன வேலை செய்கிறார் என்பதும், அவரது வருமானம் குறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். தான் அரசு சம்பளம் மற்றும் வங்கியின் வட்டியில் இருந்து வருமானம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Readmore: பூண்டு விலை கிலோவுக்கு 250 முதல் 300 ரூபாய் வரை உயர்வு…!