லியோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகர் மகேந்திர சிங் தோனி. இருவருமே தங்கள் நாட்டை சர்வதேச அரங்கில் முன்னிலை பெறச் செய்து பல்வேறு சாதனைகளை படைக்க உறுதுணையாக இருந்துள்ளனர். கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பிரான்சை தோற்கடித்து 3-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த நிலையில் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. மெஸ்ஸியின் வெற்றியை உலகமே கொண்டாடி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் ஸிவாவிற்கு மெஸ்ஸி அர்ஜெண்டினா அணியின் ஜெர்ஸி டி-சர்ட்டை பரிசளித்துள்ளார்.

அதில் “PARA ZIVA” என எழுதி மெஸ்ஸியின் கையெழுத்து இடம்பெற்றுள்ளது. PARA ZIVA என்ற ஸ்பானிஷ் வார்த்தைகளுக்கு ’ஸிவாவிற்காக இந்த அன்பளிப்பு’ என்று அர்த்தம். அந்த ஜெர்சியை அணிந்து தனது இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள தோனியின் மகள், தந்தையை போல் பிள்ளை’ என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை தோனி மற்றும் மெஸ்ஸியின் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.