கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள திப்புவின் கோட்டை ஹைதர் அலியால் 1766 கட்டப்பட்டது. இந்த கோட்டை கருங்கல்லால் ஆனது. சஹாயாத்ரி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை, 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இது ராணுவ தளமாக செயல்பட்டது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூரிலிருந்து இந்த கோட்டை 52 கிலோமீட்டர் தூரத்திலும், கோழிக்கோட்டிலிருந்து 130 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. இக்கோட்டை பாலக்காடு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோட்டையில் பெரிய மைதானம் ஒன்று உள்ளது. தற்போது இந்த கோட்டை மைதானம் கிரிக்கெட் போட்டிகள், கண்காட்சிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த பயன்படுத்தப்படுகிறது. இந்த மைதானத்திற்குள் திறந்தவெளி அரங்கம் ஒன்று “ராப்பாடி” என்ற பெயரில் உள்ளது. சிறுவர் பூங்கா ஒன்று இந்த கோட்டைக்குள் உள்ளது.
கோட்டை ஒரு அழகிய அகழியால் சூழப்பட்டு காணப்படுகிறது. இங்கு தொல்பொருள் அருங்காட்சியமும் உள்ளது. இந்த கோட்டை காலை 8 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாரத்தின் எல்லா நாட்களும் திறந்து இருக்கும். கோட்டையின் கிழக்கு நுழைவாயிலில் ஒரு ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது. அகழியால் சூழப்பட்டு காணப்படும் அழகிய காட்சியை காணவே ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.